நாட்டார் தெய்வங்கள்:2
பில்லி திருவிழா:
கடவுளுக்கு படையலாக மனித இரத்தம்:
வாரைவளர் வாராப்பூர் நாடு பகுதியில் கடவுளுக்கு மனிதனை பலி கொடுக்கும் வினோத திருவிழா நடைபெறுகிறது (அதிர்ச்சி அடைய வேண்டாம் தொடர்ந்து படிக்கவும்)
வாரைவளர் வாராப்பூர் நாடு:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாட்டமைப்பு பகுதிகளில் ஒன்றான வாராப்பூர் நாட்டு, அய்யனார்/ கருப்பர் கோவிலில் பில்லி திருவிழா வருடந்தோறும் நடைபெறுகிறது. ஆலங்குளம் தாலுகாவில் இப்பகுதி அமைந்துள்ளது! வாரைவளர் வாராப்பூர் நாட்டை சேர்ந்த 18 பட்டி மக்களும் திரளாக இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.
பில்லி சோறு எறியும் விழா:-
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாசிமக திருவிழாவின் ஒரு பகுதியாக மதியம் ஒரு மணிக்கு மேல், 3 சிறுவர்களின் அரைஞான் கயிறுகள் அறுக்கப்பட்டு சிறிய கொட்டகைக்குள் அமரவைக்கப்படுவர். சாங்கியங்கள் முடிந்த பின் அவர்களின் கழுத்தை அறுத்து நாட்டு தெய்வங்களுக்கு பலி கொடுப்பதை போல பாவனை செய்யப்படும். இதன்பின் பூசாரி ஒருவர் தனது தொடையை கிழித்து இரத்தத்தை சோற்றில் பிசைவார். மனித இரத்தம் கலந்த சோற்றை, நாட்டார்கள் மற்றும் பூசாரிகள் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு நான்கு திசைகளிலும் பில்லிகளை வேண்டி வீசப்படும். இந்த சோறு கடையில் வாங்கப்படாத அரிசியில்(விதை நெல்லில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட அரிசி)செய்தது. வீசப்படும் பில்லிசோறு மீண்டும் தரையில் விழாது என்பது அம்மக்களின் நம்பிக்கை. பில்லி சோறு கீழே விழுந்தால் அந்த திசையில் பில்லிகளின் அருள் கிடைக்கவில்லையென்றும், அந்த திசையில் இந்த வருடம் விவசாயம் செழிக்காது என்பது நம்பிக்கை. பில்லிசோற்றை வீசிவிட்டு திரும்பி பார்க்காமல் வரவேண்டும்.
செவிவழித் தகவல்:
200 ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்துள்ளது. அக்காலத்தில் திருவிழாவின் போது ஆண் குழந்தையை பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. ஒரு சமயம் திருவிழாவின் போது, பலி கொடுக்க வேண்டிய குடும்பத்தை சேர்ந்த தாய், தனக்கு ஒரே ஒரு ஆண்பிள்ளை தான் இருப்பதாகவும், பலி கொடுக்க விருப்பமில்லை என்றும் கடவுளிடம் மன்றாடியுள்ளார். பூசாரி மேல் இறங்கிய கடவுள், குழந்தையை பலி கொடுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக குழந்தையின் தொடையினை கிழித்து அந்த இரத்தத்தை படையலாக படைக்கும்படி கூறி மறைந்தார். அந்த நிகழ்வில் இருந்து அந்த வம்சத்தை சார்ந்த ஆண்பிள்ளைகளே இன்றும் தொடையை கிழித்து இரத்தத்தை படையலாக அளிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். குழந்தைகளை பலியிடுவது நாளைடைவில் நின்றுவிட்டது. பில்லிசோறை எறிந்துவிட்டு திரும்பியபின் பூசாரி மேல் வரும் சாமி, அருள்வாக்குகளை அளிப்பார். ஆதியில் கடைபிடிக்கப்பட்ட. இறைவனுக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் இரணபலி எனும் சடங்கின் தொடர்ச்சியே இந்த பில்லி சோறு எறியும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பழமையான நடைமுறை வாரைவளர் வாராப்பூர் நாட்டில் மட்டுமே இன்றும் கடைபிடிக்கப்படுவதாக தெரிகிறது.




No comments:
Post a Comment