Sunday, 16 August 2020

திரௌபதியும் அரவானும்

 நாட்டார் தெய்வங்கள்:01

திரௌபதியும் அரவானும்:

தமிழகம் முழுக்க திரௌபதி அம்மன் வழிபாடு இருந்தாலும், வடதமிழகத்தில் திரௌபதி வழிபாடு அதிகம் பரவலாக காணப்படுகிறது. தர்மராஜா கோவில் என்றும், திரௌபதி அம்மன் கோவில் என்றும் பொதுவாய் இக்கோவில் அழைக்கப்படுகிறது. மகாபாரதத்தில் ஒரு சிறிய கதாபாத்திரமே அரவான் எனும் பாத்திரம். வியாசர் மகாபாரதத்தில் அர்ஜீனனின் மகனாய் அரவான் காட்டப்படுகிறார். போரில் மரணமடைவதாகவே அரவான் கதை சமஸ்கிருதவடிவில் உள்ளது. ஆனால் தமிழ்பதிப்பில் அரவான் போருக்கு முன்பாகவே தன்னை பலியிட்டு இறப்பதாய் காட்டப்பட்டுள்ளது. இதனை கொற்றவைக்கு முன் தன்னை பலியிட்டு கொள்ளும் நவகண்ட வீரனின் தொடர்பாய்  ஹில்டிபெய்டல் முதலிய அறிஞர்கள் கருதுகின்றனர். 

"இட்டுத் தலையெண்ணு யெயினர் கல்லது

துட்டுத் தலைபோக தொல்குடி"

என்ற சிலப்பதிகார பாடலின் வாயிலாய் தலையை பலிகொடுக்கு மரபு நீண்டநாளாகவே இருந்ததை அறியலாம். கொற்றவைக்கு தரவேண்டிய குருதிப்பலியை செய்யாவிடில், ஊரினை அவள் வளம்பெற செய்யமாட்டாள் என அன்றைய நம்பிக்கையை சிலப்பதிகாரம் பேசுகிறது. கொற்றவையின் உருவம் சுதையிலும், வசதிபடைத்தோர் கல்லிலும் செய்து வழிட்டுள்ளனர்.

பதினாறாம் நூற்றாண்டில்  இயற்ப்பட்ட 'வில்லிபாரதம்' எனும் நூலிலே முதன்முதலாய் அரவானின் களப்பலி குறித்த தகவல் முதலாய் வருகிறது.  இவ்வழிபாடு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகத்தின் சிலபகுதிகளில் நடைபெறுகிது. இன்றும் கோவில்களில் இல்லாது தனிச்சிலைகளாய் கொற்றவையை வணங்கும் பழக்கம் இருந்ததற்கு உதாரணமாய் வடமாவட்டங்களான திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரியின் சில பகுதிகள் மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டத்தில் ஆங்காங்கே கொற்றவையின் ஆரம்பகால(கி.பி-5 முதல் 9 வரை) சிற்பங்கள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இச்சிற்பங்களின் கீழே அரிகண்ட, நவகண்ட வீரர்களின் சிற்பங்கள் இருப்பதும் நோக்கத்தக்கது. சங்ககால கொற்றவை வழிபாட்டின் நீட்சியே புராணங்களின் தாக்கம் காரணமாய் கொற்றவை திரௌபதியாகவும், கொற்றவைக்கு தன்னை பலியிடும் வீரன் அரவானாகவும் மாறியிருப்பதாகவும் கருத இடமுள்ளது. தொண்டைமண்டல பகுதியினை அருவாநாடு என இலக்கியம் கூறுகிறது. அருவாநாட்டின் தலைவன் அரவானாகவும்,  ஏதோ ஒருநோக்கம் பொருட்டு தன்னை பலியிட்டிருக்கலாம், அவனது நினைவாகவே இன்றும் அவனை போற்றுவதற்காக அரவான் களப்பலி நிகழ்வு நடத்தப்படுவதாகவும் கருதலாம்.

திரெளபதி அம்மன் வழிபாட்டில் போத்துராஜா, முத்தாள ராவுத்தன் என இரு காவல் தெய்வங்கள் உண்டு. இவையும் தமிழ் நாட்டில் மட்டும் உள்ளவை. போத்துராஜா மராட்டியம் வரை இருந்தாலும் தமிழ் நாட்டுடன் தொடர்பு கொண்ட தெய்வம். பல்லவர்களின் பட்டப்பெயரான போத்தரசர் (நந்திப்போத்தரையர்,  மகேந்திர போத்தரையர்) தான் போத்துராஜா எனவும்கூறுவர்.

அரவான் திரௌபதி புராணம்:

பாரதப்போரில் போர்நடக்கும் முன்பு பலியிட அனைத்து அம்சங்களும் பொருந்திய வீரனை பலியிட வேண்டும் என நிமித்தகர் கூற அவ்வம்சங்கள் பொருந்தியோர் மூவர், கிருஷ்ணர், அர்ஜீனன், அரவான் இம்மூவரில் அரவான் தன்னைபலியிட சம்மதம் தெரிவிப்பான். கிருஷ்ணரிடம் சில நிபந்தனைகள் விதிப்பான். தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அரவானை திருமணம் செய்ய எவரும் முன்வராத நிலையில் மோகினி என்ற பெண் வடிவமாக மாறி கிருஷ்ணர் அரவானின் வேண்டுதலை நிறைவேற்றினார்.  இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் உள்ள கூவாகம் என்ற இடத்தில் 18 நாள் திருவிழாவில் நினைவுகூரப்படுகிறது. இதில் முதலில் அரவானை திருநங்கைகளுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த அவருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். அடுத்து அரவான் பலியிடல் நிகழ்த்தப்பட்டபின்னர் அவர்கள் விதவைக் கோலம் கொள்கின்றனர்.

தனது வெட்டுண்ட தலையில் உள்ள கண்களின் மூலம் மகாபாரதப் போர் முழுவதையும் பார்ப்பதற்குக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மற்றொரு வரத்தைத் திரௌபதி வழிபாட்டு மரபு மையமாகக் கொண்டுள்ளது. மற்றொரு 18 நாள் திருவிழாவில், மகாபாரதப் போரைச் சித்தரிக்கும் சடங்குகளைப் பார்க்கும் வண்ணம் அரவானின் தலை கம்பத்தின் மேல் உயர்த்தி வைக்கப்படும். அலங்காரம் செய்த அரவானின் தலையே திரௌபதி கோவில்களிலுள்ள பொதுவான கடவுள் உருவமாகும். பெரும்பாலும் இந்தத் தலைகள் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய வகையில் மரத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும். சிலநேரங்களில் கோவில் வளாகத்தில் இந்தத் தலைக்கு என்று சிறு கோவில் அமைக்கப்பட்டிருக்கும் அல்லது தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும் காவலாகக் கோவில் கூரைகளின் மூலையில் அமைக்கப்பட்டிருக்கும்.

தன் வெட்டுண்ட தலையின் உருவமாகவே அரவான் வணங்கப்படுகிறார். அவர் தீராத நோய்களைக் குணப்படுத்துவதாகவும் குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தைப்பேறு அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.  

பொதுவாக திரௌபதி திருவிழா நடக்கையில் "குமார வர்க்கத்தினர்" என்று கோவிலுக்கு நேர்ந்துவிட்டு வேண்டுபவர் கோவிலிலேயே தங்கி விரதமிருந்து திரௌபதி அம்மனை வணங்குவர். பதினெட்டு நாள் கூத்து நடந்து இறுதியாக துரியோதனின் வதை நடக்கும், துரியோதனின் தொடையில் இரத்தம்போன்று சித்திகரிக்கப்பட்ட இடத்தில் பீமன் வேடமிட்ட கூத்தாடி தன் கதாயுதத்தால் துரியோதன் தொடையில் அடித்து இரத்ததை அள்ளி பூசுவார். அதன்பின் திரௌதி வேடமிட்டவர், தனது கூந்தலை அள்ளிமுடிந்து தனது சபதத்தை நிறைவேற்றுவார் இறுதியாக, அந்த திரௌபதி தீயில் இறங்கி வெளியேருவார். நெருப்பில் இறங்கி தூய்மையை நிருபிப்பது பழங்குடிகளின் வழக்கம், இதனை திருவண்ணாமலை அருகேயுள்ள ஓவியத்தில் கூட காணலாம்.





1 comment:

  1. மகிழ்ச்சி.

    ஹில்த் பெய்டலின் ஆய்வு குறித்து விரிவாகவே சொல்லலாம்.

    அவர், திரௌபதி அம்மன் வழிபாட்டின் மூலவூற்றாகக் கருதும் மேலச்சேரி திரௌபதி கோயில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது.

    ReplyDelete

பில்லி திருவிழா

  நாட்டார் தெய்வங்கள்:2 பில்லி திருவிழா: கடவுளுக்கு படையலாக மனித இரத்தம்:  வாரைவளர் வாராப்பூர் நாடு பகுதியில் கடவுளுக்கு மனிதனை பலி கொடுக்கு...